“டிரோனில் இருந்து ஏவுகணை ஏவி சோதனை இந்திய ராணுவத்தின் அடுத்த சாதனை..!! பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய ராணுவத்தின் வளர்ச்சி சீறி பாய்கிறது..!!!” என்ற கேப்ஷனுடன் ட்ரோன் ஒன்று ஏவுகணையை ஏவக்கூடிய காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலியில் இருப்பது துருக்கி நாட்டினுடைய ட்ரோன் என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியில் இருக்கும் ட்ரோன் இந்தியாவினுடையதா என்பது குறித்து கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, bursadabugan என்ற துருக்கி மொழி ஊடகம் வைரலாகும் காணொலி தொடர்பாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, துருக்கி நாட்டின் பாதுகாப்புத் தொழிற்துறையின் தலைவர் இஸ்மாயில் டெமிர் தனது எக்ஸ் தளத்தில், ROKETSAN என்ற நிறுவனம் சிறிய ரக ஏவுகணையான ’METE’ என்பதை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் என்று அச்செய்தியில் தெரிவிக்கிப்பட்டுள்ளது.
மேலும், ஏவுகணையின் அம்சங்களைப் பற்றி குறிப்பிடும் டெமிர், இந்த METE தற்போது சோதனைக்கு உட்பட்டுள்ளது. METE UAVகள், IKAகள் மற்றும் IDAகளில் பயன்படுத்தப்படும். மேலும் ஒரு கிரணேட் லாஞ்சரை பயன்படுத்தி தனி நபரால் இந்த ஏவுகணையை சுட முடியும் என்று கூறியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இஸ்மாயில் டெமிர் தனது எக்ஸ் பக்கத்தில் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி வைரலாகும் அதே தகவல் மற்றும் காணொலியை பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்திய பாதுகாப்புத்துறை நிறுவனமான DRDO, (ULPGM)-V3 என்ற ஏவுகணையை ஏவக்கூடிய ட்ரோனின் சோதனையை நடத்தியதாக கடந்த ஜூலை 25ஆம் தேதி PIB செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, ஏவுகணையை ஏவக்கூடிய ட்ரோனை இந்தியா தயாரித்துள்ளதாக வைரலாகும் தகவல் உண்மை என்றும் ஆனால், அக்காணொலியில் இருக்கக்கூடியது துருக்கியைச் சேர்ந்த ட்ரோன் என்றும் தெரியவந்தது.