உத்தரகாண்ட் மாநிலத்தின் தாராலி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 9 அன்று கனமழை பெய்ததன் காரணமாக கீர் கங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வீடுகள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மேக வெடிப்பு என்பது இப்படித்தான் இருக்கும் என்ற கேப்ஷனுடன் சமூக வலைத்தளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில் திடீரென்று வானில் இருந்து பெருமழை பெய்து வெள்ளம் ஏற்படுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இக்காணொலி AI மற்றும் VFX தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரிய வந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மைத் தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Kandha Odysseys Vines என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அதன் கேப்ஷனில், “இக்காணொலி பொழுதுபோக்கிற்காக AI மற்றும் VFX தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்கையில் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் ஹெலிகாப்டர் வருவது சினிமா தியேட்டரை உடைத்துக் கொண்டு கார் ஒன்று உள்ளே வருவது போன்ற பல்வேறு கிராபிக்ஸ் காட்சிகள் அப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இவற்றை கொண்டு வைரலாகும் காணொலியும் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டது தான் என்று தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக மேக வெடிப்பு என்பது இப்படித்தான் இருக்கும் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி AI மற்றும் VFX தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.