வங்கதேச இஸ்கான் கோவிலில் தாக்கப்படும் பசுக்கள் 
Tamil

Fact Check: வங்கதேச இஸ்கான் கோவிலில் பசுக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனவா?

வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோவிலில் பசுக்கள் கொடூரமாக தாக்கப்படுவதாக வைரலாகும் காணொலி

Ahamed Ali

இஸ்கான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கடந்த 25ம் தேதி தேச துரோக வழக்கில் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டார். வங்கதேசத்தில் நடந்த பேரணியின் போது அந்நாட்டு தேசிய கொடியை அவமதித்தற்காக சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், “வங்காளதேசம் இஸ்கான் கோவில் கோசாலாவின் நிலைமை. வாயில்லா ஜீவன்களை இப்படி நடத்துபவர், சாமானியர்களை எப்படி நடத்துவார். நாளை நமது நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். இன்று வங்கதேசம் என்றால் நாளை ???” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இந்நிகழ்வு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்றது என்றும் தெரியவந்தது.

இதுகுறித்த உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, “வாயில்லா ஜீவன்களை கொடூரமாக தாக்குவது… இத்தகைய கொடூரக்காரர்கள் முகங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குங்கள்” என்று வைரலாகும் காணொலியை Journalist Faisal என்ற எக்ஸ் பயனர் கடந்த நவம்பர் 19ஆம் தேதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அப்பதிவிற்கு பதிலளித்துள்ள Peta India அமைப்பு, “இந்திய தண்டனைச் சட்டம் (BNS) பிரிவு 325 மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் (PFA) பிரிவு 11ன் கீழ் சதர் காவல் நிலையத்தில் ஏற்கனவே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1955ஆம் ஆண்டு பசுவதைத் தடைச் சட்டத்தின் விதிகளை எப்ஐஆரில் சேர்க்க காவல்துறை துணை ஆணையரிடம் (DCP) பேசி வருகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு முதற்கட்டமாக இந்நிகழ்வு இந்தியாவில் நடைபெற்றது என்று தெரியவந்தது.

தொடர்ந்து, தேடுகையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் பால் வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றதாக khabristanpunjabi என்ற இணையதளத்தில் வைரலாகும் காணொலியின் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கிடைத்த தகவலைக் கொண்டு தேடுகையில், Tribune India ஊடகம் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.

அதன்படி, “பசுக்களை மிருகத்தனமாக அடித்து கொலை செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த ஸ்ரீஸ்ட் பக்ஷி தலைமையிலான அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

தொடர்ச்சியாக இவர்கள் ஜாம்ஷர் காவல் நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு PPR மாலுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் பால் பண்ணையின் உரிமையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்ட விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை, எஃப்ஐஆர்-ஐ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோவிலில் பசுக்கள் கொடூரமாக தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Pro-Palestine march in Kerala? No, video shows protest against toll booth

Fact Check: ഓണം ബംപറടിച്ച സ്ത്രീയുടെ ചിത്രം? സത്യമറിയാം

Fact Check: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்தாரா விஜய்?

Fact Check: Christian church vandalised in India? No, video is from Pakistan

Fact Check: ಕಾಂತಾರ ಚಾಪ್ಟರ್ 1 ಸಿನಿಮಾ ನೋಡಿ ರಶ್ಮಿಕಾ ರಿಯಾಕ್ಷನ್ ಎಂದು 2022ರ ವೀಡಿಯೊ ವೈರಲ್