கோயம்புத்தூரில் இஸ்லாமியர்கள் சமைத்து விற்பனை செய்யக்கூடிய பிரியாணியில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகள் கலக்கப்படுவதாக பொய் செய்தி கடந்த சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. ஆனால், இத்தகவல் தவறானது என்றும் அவ்வாறான மாத்திரை கலக்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்திருந்தனர்.
இந்நிலையில், “இந்துக்களை குறிவைத்து இந்து பெண்கள் கர்பப்பை கருமுட்டைகளை அழிந்து குழந்தை இல்லாமல் செய்யும் மற்றும் விரைவில் சில வருடங்களில் மரணத்தை ஏற்படுத்தும் இந்த மாத்திரைகள் மற்றும் ஆண்களுக்கு ஆண்மை இல்லாத மலட்டு தன்மை மற்றும் குறுகிய வருடத்தில் மரணம் ஏற்படுத்தும் இந்தியாவை இஸ்லாமிய நாடக மாற்ற வேண்டும் என பயங்கரவாதிகள் இந்தியாவில் சுற்றி திரிவதை கண்டு பிடித்த காவல் துறை எச்சரிக்கை இந்து சகோதரர்களே முஸ்ஸ்லிமிடம் எச்சரிக்கை பயணிகளிடமிருந்து பேரிச்சம் பழங்களைஎடுக்கவோ,ரயில் நிலையத்திலோ அல்லது ரயில் நிலையத்தில் உள்ள விற்பனையாளர்களிலோ பேரிச்சம் பழங்களை வாங்காதீர்” என்ற தகவலுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், ஒருவர் பேரிச்சம்பழத்திற்குள் மாத்திரையை கரைத்து வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் காணொலியில் இருப்பவர் போதை தரும் மாத்திரையை பயன்படுத்தி ரயில் பயணிகளிடம் கொள்ளை அடிக்கும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.
வைரலாகும் தகவலின் உண்மைத் தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Taaza TV கடந்த ஜனவரி 13ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை வெளியிட்டிருந்தது. அதில், “ரயில்களில் போதைப்பொருள் கும்பல் ஒரு தனித்துவமான முறையை பின்பற்றி பேரிச்சம்பழத்திற்குள் போதைப்பொருள் கலந்து பயணிகளிடம் கொள்ளையடிக்கிறது. ரயில்வே பாதுகாப்பு படையினர் இவர்களை ஹவுரா ரயில் நிலையத்தில் பிடித்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Munsif TV India என்ற உருது ஊடகமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கிடைத்த தகவலைக் கொண்டு ஹவுரா ரயில்வே காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தேடினோம். கிடைத்த FIR-ன் படி, ஜனவரி 11, 2025 அன்று, ஹவுரா ரயில் நிலையத்தின் பழைய வளாகத்தில் உள்ள பிளாட்ஃபார்ம் எண் 7ல் மூன்று பேர் கொண்ட கொள்ளையர்கள் குழுவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பேரிச்சம்பழத்தில் போதை தரும் மாத்திரைகளை (Ativan 2 MG) கலந்து கொடுத்து ரயில்களில் கொள்ளையடித்து வந்தனர். FIR-ல் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் ஷம்ப்ரு பாஸ்வான், கோவிந்த் குமார் மற்றும் முகமது இர்ஃபான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் இந்துக்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரைகளை பேரிச்சம்பழத்திற்குள் வைத்து கொடுக்கும் இஸ்லாமியர்கள் என்று வைரலாகும் தகவல் தவறானது. உண்மையில் அவர்கள் ரயிலில் போதை தரும் மாத்திரைகளை போரிச்சம்பழத்திற்குள் வைத்து கொள்ளை அடிக்கும் கும்பல் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.