பிராமண சமூகத்தின் மீதான அவதூறு பிரச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து சமுதாய தலைவர்கள், தமிழக பிராமண சமூகத்தினர் பங்கேற்றனர்.
இந்நிலையில், “பிராமணர்களின் இந்த எழுச்சி தமிழகத்தில் முதல்முறை…” என்ற கேப்ஷனுடன் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் கூட்டமாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இப்புகைப்படம் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ நிகழ்வின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. இப்புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2012 ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம் என்று Flickr தளத்தில் chandrasekaran arumugam என்பவர் வைரலாகும் பதிவில் இருக்கும் புகைப்படத்தைப் போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில், “சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ நிகழ்வின் போது பக்தர்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்” என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து Balu Velachery என்ற பயணரும் Flickr தளத்தில் இதே போன்ற ஒரு புகைப்படத்தை 2017ஆம் ஆண்டு பதிவிட்டுள்ளார். வைரலாகும் புகைப்படமும் Flickrல் உள்ள புகைப்படமும் ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் இரு புகைப்படத்திலும் முன் வரிசையில் இருக்கும் பக்தர்களின் தோற்றம் ஒன்றாக இருப்பதை நம்மால் காண முடிந்தது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் சென்னையில் நடைபெற்ற பிராமணர்கள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று வைரலாகும் புகைப்படம் உண்மையில் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ நிகழ்வின் போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.