“விஜய் திரைல எதிரிகளை கொளுத்தும்போது, அவன் ஃபேன்ஸ் தியேட்டரையே கொளுத்தி விட்ருக்கானுங்க” என்ற கேப்ஷனுடன் நடிகர் விஜய் நடித்த “கோட்” திரைப்படத்தின் திரையிடலின் போது அவரது ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்ததாக காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் “டைகர் 3” திரைப்படத்தின் போது நடைபெற்ற நிகழ்வு என்றும் தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி The News Minute வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.
அதில், “பாலிவுட் நடிகர் சல்மான் கானின் “டைகர் 3” திரைப்படத்தின் திரையிடலின் போது அவரது ரசிகர்கள் நவம்பர் 12ஆம் தேதியன்று மராட்டிய மாநிலம் நாசிக்கின் மாலேகானில் உள்ள மோகன் திரையரங்கில் பட்டாசுகளை வெடித்தனர். இரவு 10 மணியளவில் திரையரங்கிற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் பல பட்டாசுகளை வெடித்தனர். இதில், யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Scroll, Times of India உள்ளிட்ட ஊடகங்களும் காணொலியுடன் வெளியிட்டுள்ளன.
Conclusion:
நம் தேடலின் முடிவாக “கோட்” திரைப்படத்தின் திரையிடலின் போது திரையரங்கிற்குள் ரசிகர்கள் பட்டாசு வெடித்ததாக வைரலாகும் காணொலி தவறானது என்றும் உண்மையில் அது “டைகர் 3” திரைப்படத்தின் திரையிடலின் போது மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.