தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தியில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இம்மாநாடு குறித்தும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்தும் நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
அதில், தவெக மாநாடு குறித்து செய்தியாளர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பவே அதற்கு, “மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்கிறார். தொடர்ந்து மாநாட்டில் நடிகர் விஜய் பேசியது குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “மிக்க நன்றி” என்று பதிலளிக்காமல் செய்தியாளர் சந்திப்பில் இருந்து விடைபெறும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் செய்தியாளர் சந்திப்பு தவெக-வின் முதல் மாநில மாநாட்டின் போது ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து என்று தெரியவந்தது.
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறித்து யூடியூபில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்துக்கள் | தவெக கட்சி முதல் மாநாடு குறித்து ரஜினிகாந்த் கருத்து” என்ற தலைப்பில் 2024ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி Chennai Glitz என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு வைரலாகும் காணொலி தவெக-வின் முதல் மாநில மாநாட்டின்போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. முதல் மாநாடு விக்கிரவாண்டியில் 2024ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதே ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வைரலாகும் ரஜினிகாந்தின் பேட்டி குறித்து புதிய தலைமுறை விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, 2024ஆம் ஆண்டு தீபாவளி அன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் வீட்டின் முன்பு ரஜினி தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக, சந்தோஷமா, ஆரோக்கியமாக தீபாவளியை கொண்டாட வேண்டும். விஜய் மாநாட்டில் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார். இவற்றின் மூலம் வைரலாகும் காணொலி பழையது என்று உறுதியாகிறது.
தொடர்ந்து, மதுரையில் நடைபெற்ற மாநாடு குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஏதேனும் கருத்து தெரிவித்தாரா என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது அவ்வாறாக எந்த ஒரு கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என்று தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததாக வைரலாகும் காணொலி உண்மையில் 2024ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக-வின் முதல் மாநில மாநாடு குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து என்று தெரியவந்தது.