கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக நவம்பர் 19, 2026 அன்று காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 70 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்தச் சூழலில், முதலமைச்சர் விஜய் தனது காரில் செல்லும்போது, அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் காணொலி எடுத்த இரு பெண்களைப் பார்த்து சிரித்தபடி கையசைத்துச் செல்லும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொலியைப் பகிர்ந்த எக்ஸ் தளப் பயனர் ஒருவர், "கட்சியோட எம்எல்ஏ இறந்துட்டாரு.. மூஞ்சில கொஞ்சங்கூட வருத்தமே இல்லாம சிரிச்சிட்டே டாட்டா காட்ற தலைவர்... அத விசில் அடிச்சி என்ஜாய் பன்ற தொண்டர்கள்.. ரியல் லைஃப் ஹோம்லேண்டர்" என்று பதிவிட்டு, வி.எஸ்.பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது எடுக்கப்பட்ட காட்சி என்பது போல் சித்தரித்துள்ளார்.
Fact Check:
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தக் காணொலியின் உண்மைத்தன்மையை அறிய சவுத்செக் குழு விரிவான ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில், வைரலாகும் காணொலிக்கும் மறைந்த எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் இறுதி அஞ்சலி நிகழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலாவதாக, வைரல் காணொலியின் மூலத்தைத் தேடியபோது, புதிய தலைமுறை வெளியிட்ட எக்ஸ் பதிவில் இதே காட்சிகள் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. அதில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க முதலமைச்சர் விஜய் சென்றபோது எடுக்கப்பட்ட காணொலி இது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, இது தொடர்பான செய்திகளைத் தேடியபோது, நவம்பர் 19, 2026 அன்று வெளியான தினத்தந்தி செய்தியில், தமிழக ஆளுநர் அர்லேகர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, நவம்பர் 19 அன்று வெளியான தினமணி செய்தியின்படி, சென்னை தனியார் மருத்துவமனையில் ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து நலம் விசாரித்த பிறகே, காலமான கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் விஜய் சென்றார் என்பது தெளிவாகிறது. இதன் மூலம், ஆளுநரை நலம் விசாரிக்கச் சென்றபோது எடுக்கப்பட்ட காணொலியை, எம்.எல்.ஏ.வின் இறுதி அஞ்சலிக்குச் சென்றபோது எடுக்கப்பட்டதாகத் தவறாகத் திரித்துப் பரப்பி வருவது நிரூபணமாகியுள்ளது.
Conclusion:
சவுத்செக் நடத்திய உண்மைச் சரிபார்ப்பில், மறைந்த எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் விஜய் சிரித்தபடி சென்றதாகப் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆளுநர் அர்லேகரை நலம் விசாரிக்க முதலமைச்சர் விஜய் சென்றபோது எடுக்கப்பட்ட காணொலி தவறான சூழலுடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.