“எச்சரிக்கை பதிவு: வடநாட்டு ஹிந்திக்கார பஷங்க போர்வை புர்கா மற்றும் இதுபோன்ற பல பொருட்கள் விற்பனை செய்வது போல் சூட்கேஸ் போன்ற பல்வேறு முறைகளில் குழந்தைகளை கடத்திச் செல்கின்றனர் எனவே இதுபோன்ற அறியாதவர்கள் சாக்லேட் குல்பி ஐஸ் பஞ்சு மிட்டாய் இன்னும் விளையாட்டு பொருட்கள் என்று எதைக் கொடுத்தாலும் வாங்க வேண்டாம் என்று நம் குழந்தைகளிடம் கூறி எச்சரித்து கவணமாக இருக்கச் சொல்லுங்கள்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஹிந்தி மொழியில் பேசும் நபர் ஒருவர் குழந்தையை சூட்கேசில் வைத்து கடத்துவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இது பிராங்க் வீடியோ என்று தெரியவந்தது. முதலில், காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம்.
அப்போது, Talha Qureshi என்ற யூடியூப் சேனலில் 2021ஆம் ஆண்டு இதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதன் கமெண்ட் பகுதியில் பலரும் இது போலி வீடியோ என்றும் சிலர் அதில் சிகப்பு தொப்பி அணிந்திருப்பவர் Raju Bharti என்றும், அவர் ஒரு பிராங்க் வீடியோ எடுக்கும் நபர் என்றும் கூறியிருந்தனர்.
தொடர்ந்து, அந்தப் பெயரைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது அவர் பிரபல யூடியூபர் மற்றும் பிராங்க் வீடியோ எடுப்பவர் என்பது தெரியவந்தது. மேலும், வைரல் காணொலியில் சிகப்பு தொப்பி அணிந்திருந்தவரையும் ராஜு பார்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த அவரது புகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் இருவரும் ஒரே நபர் என்பதும் தெரிய வந்தது. அவர் தனது யூடியூப் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் பல்வேறு பிராங்க் வீடியோக்களை(பதிவு 1, பதிவு 2, பதிவு 3) பதிவிட்டு இருப்பதும் நம் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Conclusion:
கிடைத்திருக்கக் கூடிய தகவல்களின் அடிப்படையில் சூட்கேசில் குழந்தையைக் கடத்தும் வட இந்தியர் என்று வைரலாகும் காணொலி உண்மை இல்லை என்றும் அது ராஜு பார்தி என்ற பிராங்க் வீடியோ எடுப்பவரால் எடுக்கப்பட்ட வீடியோ என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.