சமீப காலமாக தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், அவர்களை கடத்தி உடல் உறுப்புகளை விற்கின்றனர் என்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன. இவை வதந்தி என்று தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், வேலூரைச் சேர்ந்த முஹைதீன் பாஷா என்பவர் பேசக்கூடிய ஆடியோ ஒன்று காணொலியுடன் வாட்ஸ்ஆப்பில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில், எங்கள் ஊரில் ஹிந்திக்காரர்கள்(வடமாநிலத்தவர்கள்) 10 பேரை பிடித்துள்ளனர். அவர்கள் இஸ்லாமிய பெண் குழந்தைகளை, சாக்லேட் உள்ளிட்டவற்றை கொடுத்து அவர்களது முகத்தில் துணியைக் கட்டி கோணிப்பையில் போட்டு கடத்திச் சென்றுள்ளனர். சிக்னலில் நிற்கும் போது குழந்தைகள் சப்தமிடவே அருகில் இருந்தவர்கள் கடத்தல்காரர்களை பிடித்துள்ளனர். அனைத்து கடத்தல்காரர்களும் பிடிபட்டனர், பத்து பேரும் பத்து இஸ்லாமிய பெண் குழந்தைகளை வைத்திருந்தனர் என்றும் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார். மேலும், காணொலியில் அரைநிர்வாணத்தில் ஒருவரை தூணில் கட்டிவைத்து பலர் சேர்ந்து அடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இது வதந்தி என்று தெரியவந்துள்ளது. முதலில், காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, CHIKAM__ANANDA என்ற யூடியூப் சேனலில் பிப்ரவரி 22ஆம் தேதி காணொலி ஒன்று பதிவிடப்பட்டிருந்தது.
அக்காணொலி பிப்ரவரி 18ஆம் தேதி சென்னை பம்மலில் எடுக்கப்பட்டது என்று அதில் வாட்டர்மார்க் இடம்பெற்றிருந்தது. வைரலாகும் காணொலியிலும் யூடியூப் சேனலில் இருந்த காணொலியிலும் அந்த நபரை தூணில் கட்ட பயன்படுத்தப்பட்டிருந்த கயிறு நீல நிறத்தில் இருப்பதையும் இரு காணொலியில் இருக்கும் நபர் ஒரே மாதிரியான பேண்ட் அணிந்திருப்பதையும் கொண்டு நம்மால் இரண்டும் ஒரே சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொலி என்று முதற்கட்டமாக உறுதி செய்ய முடிந்தது.
மேலும், அதில் இருக்கும் நபர் பார்ப்பதற்கு திருநங்கையை போன்று இருந்தார். கிடைத்த தகவல்களைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி ராஜ் நியூஸ் தனது யூடியூப் சேனலில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “பம்மலை அடுத்த மூங்கில் ஏரியில் குழந்தைகளை கடத்த வந்ததாக திருநங்கை தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்” என்று வைரலாகும் காணொலியில் இருக்கும் நபர் தாக்கப்படுவது போன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, பிப்ரவரி 21ஆம் தேதி நக்கீரன் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், “பம்மல் மூங்கில் ஏரிப் பகுதியில் குழந்தையைக் கடத்த வந்த நபர் எனத் திருநங்கை ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான காணொலி காட்சிகள் இணையத்தில் பரவி வைரலானது. இந்த சம்பவத்தில் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றும் அந்த திருநங்கை ஐ.டி. ஊழியர் என்றும் கூறப்பட்டுள்ளது”
அதேசமயம், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை இன்று(மார்ச் 1) பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, “திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் உள்ள அய்யம்பாளையம் புதூர் கிராமத்தில் கடந்த இரு நாட்களாக வடமாநிலத்தை சேர்ந்த நபர்களால் குழந்தைகளை கடத்த முயற்சி செய்ததாகவும், அப்போது ஊர்மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சேர்ந்து வட மாநிலத்தவர்கள் மேல் கல்லை வீசி குழந்தைகளை மீட்டதாகவும், பின்னர் வடமாநிலத்தவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும், இது போன்ற செயல்கள் இப்பகுதியில் அடிக்கடி நடைபறுவதால் ஊர் பொது மக்கள் சேர்ந்து காவல் நிலைத்தில் புகார் அளிக்க சென்றுள்ளதாக ஒரு பொய்யான வீடியோ பதிவும், ஒரு வடமாநிலத்தவரை பிடித்து தாக்கி விசாரணை செய்வது போல ஒரு பொய்யான வீடியோவையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இச்செய்தியை யாரும் நம்பவேண்டாம் எனவும், பொய்யான செய்தியை யாரும் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும், பரப்பினால் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆடியோவில் உள்ளது போன்ற சம்பவம் ஏதும் வேலூரில் நடைபெற்றதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது அவ்வாறாக எந்த செய்தியும் பதிவாகவில்லை என்று உறுதியானது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக வேலூரில் வட மாநில இளைஞர்கள் 10 பேர் இஸ்லாமிய பெண் குழந்தைகளை கடத்திச் செல்வதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ மற்றும் காணொலி வதந்தி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.