“P.M.மோடிஜி அவர்களின் தாயார் வசித்த வீடு.நம்ம தமிழ் நாட்டு கவுன்சிலர் கூட இந்த வீட்டில் வசிக்க மாட்டார். நம் பிரதமரை எண்ணி நாம் பெருமைகொள்வோம்.இது மாதிரியான தேசியத்திற்கென தன்னை அர்பனிப்பவரை நம் தமிழ் நாட்டில் கால் பதிக்க விட மாட்டார்களாம்.” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இளைஞர் ஒருவர் வீட்டினை காட்சி படுத்தியுள்ளார். மேலும், அவ்வீட்டில் தான் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வசித்ததாக கூறி பரப்பப்பட்டு வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “குஜராத் வாத்நகரில் உள்ள இந்தியப் பிரதமரின் வீடு” என்ற தலைப்புடன் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி SAGAR THAKUR VLOG என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது. தற்போது இவ்வீட்டில் யார் உள்ளார் என்பதை அறிய அவரை தொடர்பு கொண்டோம். ஆனால், இக்கட்டுரை பிரசுரமாகும் வரை பதிலளிக்கவில்லை. அவரிடம் இருந்து பதில் வந்தால் இக்கட்டுரை அப்டேட் செய்யப்படும். மேலும், 2021ஆம் ஆண்டு இது குறித்து இந்தியா டுடே ஊடகம் செய்தி மற்றும் காணொலியை வெளியிட்டுள்ளது. அச்செய்தியில், “பிரதமர் மோடி இளம் வயதில் தன்னுடைய சகோதரர்களுடன் வசித்த வீடு” என்று குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து, பிரதமரான பிறகும் மோடியின் தாயார் இந்த வீட்டில் தான் வசித்தாரா என்று தேடியபோது, “குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி தன்னுடைய பிறந்த நாளன்று காந்திநகரில் வசித்த தன் தாயிடம் ஆசி பெற வந்த காணொலியை” DeshGujarat என்ற யூடியூப் சேனல் 2012ஆம் ஆண்டு பதிவிட்டுள்ளது. இதன் மூலம் மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போதே அவரது தாயார் காந்தி நகருக்கு வந்துவிட்டது உறுதியாகிறது. காணொலியில் காட்டப்படும் வீட்டில் இல்லை என்பதும் தெரியவருகிறது.
மேலும், பெரும்பாலும் மோடி தனது பிறந்தநாளன்று தனது தாயாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவதை வழக்கமாக வைத்திருந்தார். அவ்வாறாக தாயாரின் இறப்பு வரை அதாவது டிசம்பர் 2022ஆம் ஆண்டு வரை வெளியாகியுள்ள காணொலிகளை(காணொலி 1, காணொலி 2) வைத்து பார்க்கும்போது பிரதமரின் தாயார் வாட் நகர் வீட்டில் வசிக்கவில்லை என்பது உறுதியாகிறது.
Conclusion:
இறுதியாக, வைரலாகும் காணொலியில் இருக்கும் வீடு, பிரதமர் நரேந்திர மோடி இளம் வயதில் வாழ்ந்த வீடுதான். ஆனால், அவர் பிரதமரான பிறகும் அவரது தாயார் அந்த வீட்டில் தான் வசித்தார் என்று தவறாக பதிவிட்டுள்ளனர். இதனை நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.