“வேலூரில் 2 சிறுவர்கள் கட்டிடத்திற்கு நரபலி.. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” என்ற கேப்ஷனுடன் நியூஸ் தமிழ் 24x7 என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், “வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 2 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு. நண்பர்களின் குழந்தைகளை அழைத்து சென்று கொலை செய்த கட்டிட ஒப்பந்ததாரர் கைது. சிறுவர்களை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி கொலை செய்த வசந்தகுமார். நண்பர் யோகராஜின் மகன்கள் யோகித்(5), தர்ஷன்(4) கொலை - வசந்தகுமார் கைது. மனைவியை பிரிந்து சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்த வசந்தகுமார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இரண்டு சிறுவர்கள் கட்டிடத்திற்கு நரபலி கொடுக்கப்பட்டது என்ற தகவல் தவறானது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இச்செய்தி குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, The New Indian Express இன்று (செப்டம்பர் 21) செய்தி வெளியிட்டிருந்தது.
அதில், “தர்ஷன் (4), யோகித் (6) ஆகியோர் தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இவர்களது தந்தை யோகராஜ் (33). இவரும் குமார் என்பவரும் கட்டுமான மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வந்தனர். சில மாதங்களுக்கு முன், யோகராஜ், குமாரிடம், ரூ. 14,000 கடன் வாங்கி, பாதி தொகையை மட்டுமே திருப்பி செலுத்தினார். பாதித் தொகை மட்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டதைக் குறித்து குமார் தனது மனைவியிடம் கூறாததால் குமாரிடம் மனைவி தகராறில் ஈடுபட்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். குமார் இப்பிரிவினை தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும், யோகராஜை பழிவாங்க திட்டமிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சூழலில், வியாழக்கிழமை(செப்டம்பர் 19) மாலை. குமார், யோகராஜின் வீட்டிற்குச் சென்று சிறுவர்களை வெளியே அழைத்துச் செல்லும்படி தனது நண்பர் அறிவுறுத்தியதாக யோகராஜின் மனைவியிடம் கூறினார். அவரை நம்பிய யோகராஜின் மனைவி, இரு மகன்களையும் அவருடன் அனுப்பி வைத்தார். குமார் சிறுவர்களை சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்திற்குப் பிறகு, குமார் கோயிலுக்கு அருகிலுள்ள தனது பாட்டி வீட்டிற்குத் திரும்பி இரவு அங்கேயே தங்கினார். யோகராஜும், அவரது மனைவியும் தங்கள் குழந்தைகளைக் காணவில்லை என்பதை அறிந்ததும், அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் கோயிலின் பின்புறத்தில் இருந்து சடலங்களை மீட்டு நேற்று (செப்டம்பர் 20) இரவு குமாரைக் கைது செய்தனர். விசாரணையின் போது, நிதி தகராறு காரணமாக கொலை செய்ததை குமார் ஒப்புக்கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை தினகரன் ஊடகமும் வெளியிட்டுள்ளது.
பரவி வரும் தகவலில் இருப்பது போன்று நரபலி ஏதும் கொடுக்கப்பட்டதா என்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவிடம் சவுத்செக் சார்பாக விளக்கம் கேட்டபோது, “அவ்வாறான எதுவும் இல்லை. பணப் பிரச்சினை காரணமாகவே இக்கொலை நடைபெற்றுள்ளது” என்றார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக வேலூரில் இரண்டு சிறுவர்கள் கட்டிடத்திற்கு நரபலி கொடுக்கப்பட்டதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அக்கொலை பணப் பிரச்சினை காரணமாக நடைபெற்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.