“மோடி என்னப்பா ரயிலுக்கு உள்ளே பயணம் செய்ய சொல்றாரு… இந்த நாட்டில் சுதந்திரமாக ரயிலுக்கு மேலே கூட பயணம் செய்யலாம்…” என்ற கேப்ஷனுடன் பயணிகள் கூட்டமாக ஓடி ரயிலின் மேல் பகுதியில் ஏறும் காணொலியை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், இருக்கக்கூடிய பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Fact-check:
இக்காணொலியின் உண்மைத்தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி Economic Times, இந்தியாவின் அகர்தலா முதல் வங்கதேசத்தில் உள்ள அகவுரா வரை இயங்கி வரும் ரயில் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இருக்கும் வங்கதேச ரயிலும் வைரலாகும் காணொலியில் இருக்கும் ரயிலும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருப்பதை நம்மால் காண முடிகிறது. இதன் மூலம் இது வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட காணொலி என்பதை நம்மால் கூறமுடிகிறது.
தொடர்ந்து, காணொலியில் இருக்கும் ரயிலின் பக்கவாட்டு பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பச்சை நிறத்தில் இருக்கும் வங்கதேச ரயில்கள் குறித்து பல்வேறு காணொலிகள் இணையத்தில் வெளியாகி இருப்பதை நம்மால் காணமுடிந்தது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக காணொலியின் 2:59 பகுதியில் ரயிலின் பக்கவாட்டில் “Bangladesh Railway” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக இந்தியாவில் உள்ள ரயிலில் பலரும் முந்தியடித்துக் கொண்டு ஏறுகின்றனர் என்று வைரலாகும் காணொலி உண்மையில் வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.