நடிகர் விஜய்யின் பள்ளி அமைந்துள்ள விவசாய இடம் என்று வைரலாகும் சாட்டிலைட் புகைப்படம் 
Tamil

Fact Check: நடிகர் விஜய்க்கு சொந்தமான பள்ளி விவசாய நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று வைரலாகும் புகைப்படம்? உண்மை என்ன?

விவசாய நிலத்தில் கட்டப்பட்டுள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான விஜய் வித்யாஷ்ரம் பள்ளி என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் சாட்டிலைட் புகைப்படம்

Ahamed Ali

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கி உள்ள நடிகர் விஜய் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “நடிகர் விஜய் நடத்தி வரும் விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் மும்மொழிக் கொள்கை கற்பிக்கப்படுவதாக” பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், “ஒரு அழகான விவசாய கிராமத்தையே அழிச்சிருக்காங்க. இதுல எத்தனை விவசாய குடும்பம் பாதிக்கபட்ருபாங்க. சரி விவசாயத்த அழிச்சி பள்ளிகூடம் கட்டி குறைந்த கட்டணத்துலயாவது கல்வி தருவாங்கனு பாத்தா Pre-KG-கே ஆண்டுக்கு 46 ஆயிரம் கட்டணமாம். பரந்தூர்ல பேசுனதலாம் பொய்யா கோபால்??” என்ற கேப்ஷனுடன் நடிகர் விஜய்யை டேக் செய்து சமூக வலைதளங்களில் (Archive) இரு புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அதில், பள்ளி கட்டப்படுவதற்கு முன்பும் பின்பும் இருந்த படூர் கிராமத்தின் சாட்டிலைட் மற்றும் வான்வழி புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது வெவ்வேறு பகுதிகள் என்றும் தெரியவந்தது. 

இதுகுறித்து உண்மைத் தன்மையை கண்டறிய இரு புகைப்படங்களையும் தனித்தனியே ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, dronexl என்ற இணையதளம் 2020ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி வைரலாகும் அதே சாட்டிலைட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. அதில், “ஒன்றாக இணைக்கப்பட்ட நான்கு ட்ரோன் புகைப்படங்கள் UKவில் உள்ள தொலைந்த Gainsthorpe Medieval கிராமத்தின் சிறந்த வான்வழி காட்சியை வழங்குகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Dronexl இணையதளம் வெளியிட்டுள்ள புகைப்படம்

மேலும், Gainsthorpe Medieval கிராமம் குறித்து English Heritage என்ற இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இங்கிலாந்தில் உள்ள 2,000 அல்லது அதற்கு மேற்பட்ட கைவிடப்பட்ட Mediaval கிராமங்களில், லிங்கன்ஷையரில் உள்ள Gainsthorpe மிகவும் தெளிவாகக் காணக்கூடிய மற்றும் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் சாட்டிலைட் புகைப்படம் இங்கிலாந்தில் உள்ளது என்று தெரியவந்தது.

தொடர்ந்து, இரண்டாவது புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2018ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி Sri Vijay Vidyashram - CBSE Bagalur, Hosur என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் தங்களது பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா என்று குறிப்பிட்டு வைரலாகும் அதே புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. மேலும், அப்பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி இக்கல்வி நிறுவனம் 1987ஆம் ஆண்டு டி.என்.சி. சின்னசாமி என்பவரால் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், Google Earth உதவியுடன் விஜய் வித்யாஷ்ரம் பள்ளி அமைந்துள்ள இடத்தை பல்வேறு ஆண்டுகளில் பின்னோக்கிச் சென்று பார்த்த போது அப்பள்ளி அமைவதற்கு முன்பாகவே அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

நடிகர் விஜய்யுடைய பள்ளியின் Google Earth சாட்டிலைட் புகைப்படம்

Conclusion:

நம் தேடலில் முடிவாக நடிகர் விஜயின் விஜய் வித்யாஷ்ரம் பள்ளி விவசாய நிலத்தில் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தது என்றும் வைரலாகும் தகவல் தவறானது என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: ‘Vote chori’ protest – old, unrelated videos go viral

Fact Check: രാഹുല്‍ ഗാന്ധിയുടെ വോട്ട് അധികാര്‍ യാത്രയില്‍ ജനത്തിരക്കെന്നും ആളില്ലെന്നും പ്രചാരണം - ദൃശ്യങ്ങളുടെ സത്യമറിയാം

Fact Check: நடிகர் ரஜினி தவெக மதுரை மாநாடு குறித்து கருத்து தெரிவித்ததாக பரவும் காணொலி? உண்மை என்ன

Fact Check: ಬಾಂಗ್ಲಾದೇಶದಲ್ಲಿ ಕಳ್ಳತನ ಆರೋಪದ ಮೇಲೆ ಮುಸ್ಲಿಂ ಯುವಕರನ್ನು ಥಳಿಸುತ್ತಿರುವ ವೀಡಿಯೊ ಕೋಮು ಕೋನದೊಂದಿಗೆ ವೈರಲ್

Fact Check: రాహుల్ గాంధీ ఓటర్ అధికార యాత్రను వ్యతిరేకిస్తున్న మహిళ? లేదు, ఇది పాత వీడియో