“அவசரத் தேவை, ஆயிரம் பெரியார்கள்…! ‘வதைக்கப்பட வேண்டியவள் பெண்’ என்கிறது பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கோட்பாடு. பெண்கள் மீதான வன்முறையும் ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதான வன்முறையும் சிறுபான்மையினர் மீதான வன்முறையும் வட இந்தியாவின் பல பகுதிகளில் அன்றாட நிகழ்வு ஆகிவிட்டது. பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் பரப்பும் நச்சுக் கோட்பாடுகள் பரவிய பகுதிகளில் இதுபோன்ற மனச்சாட்சியற்ற தாக்குதல்கள் சர்வ சாதாரணக் காட்சிகள் ஆகிவிட்டன.” என்ற கேப்ஷனுடன் பெண் ஒருவரை சிலர் சாலையில் வைத்து தாக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் நிலம் தொடர்பாக ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து, காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Navbhaarattimes 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், “உத்தரப்பிதேச மாநிலம் படாயுன் பகுதியில் உள்ள மெஹ்ராலி கிராமத்தில் வசிக்கும் வயதான பெண் முன்னி தேவி. தனது குடும்பத்தினர் சிலர் நிலத் தகராறில் தன்னை அடித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதில், அவரது தலை உடைந்துள்ளது. குடும்பத்தில் மற்றொரு பெண்ணின் கை உடைந்துவிட்டது. காவல்துறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில், சமாஜ்வாதி கட்சி 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி இக்காணொலியை தவறான தகவலுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தது. அதன் பதிவிற்கு மூத்த காவல் கண்காணிப்பாளரின் விளக்க காணொலியுடன் படாவுன் மாவட்ட காவல்துறை பதிலளித்து இருந்தது. அதில், “பெண்களை தாக்கிய முக்கிய குற்றவாளியின் பெயர் அரவிந்த். விசாரணையில் அவர் கீழே சாலையில் இருக்கும் தனது பெரியம்மாவைத் தான் தாக்கியுள்ளார் என்பது தெரிய வந்தது.
ஏற்கனவே இவர்கள் அரவிந்தை தாக்கியதில் அரவிந்துக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது. இது நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டை. இதன் மூலம் இரு தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குடும்ப தகராறை, சமூக வலைதளங்களில் சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக நிலம் தொடர்பாக குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட சண்டையை தவறாக பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.